முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட்டிற்கு இந்த சோகமான நேரத்தில் ஆதரவு அளிக்க ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் கெய்க்வாட்டின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட்டின் குடும்பத்திற்கு பிசிசிஐ தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார். கெய்க்வாட்டின் உடல்நிலை குறித்த தகவலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கெய்க்வாட்டிற்கு நிதி உதவி செய்யுமாறு பிசிசிஐயிடம் கோரிய கபில் தேவ்
முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ஒரு வருடத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி வருவதாகவும், லண்டனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சந்தீப் பாட்டீல் தெரிவித்திருந்தார். கெய்க்வாட் தனக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்பதை தனிப்பட்ட முறையில் சந்தீப் பாட்டீலிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கரும் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் செலரிடம் தனிப்பட்ட முறையில் பேசி இருந்தார். 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவும், கெய்க்வாட்டிற்கு நிதி உதவி செய்யுமாறு பிசிசிஐயிடம் வலியுறுத்தினார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கவனித்துக் கொள்ள பிசிசிஐயிடம் சரியான அமைப்பு இல்லாததை கபில் மேலும் எடுத்துரைத்தார்.