இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் செயல்பட உள்ளது.
சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், ஒரு போட்டிக்கு ரூ.4.2 கோடி செலுத்தி பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, ரூ.3.8 கோடிக்கு டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை பேடிஎம் நிறுவனத்திடம் இருந்து மாஸ்டர்கார்டு வாங்கி வைத்திருந்தது.
அதன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ புதிய டைட்டில் ஸ்பான்சருக்கான ஏலத்தை அறிவித்தது.
ஆனால் ஏலத்தில் பங்கேற்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் அடிப்படை விலை ரூ.2.4 கோடியாக குறைக்கப்பட்டது.
IDFC First Bank will be new title sponsor
ஐபிஎல்லால் இருதரப்பு போட்டிகளுக்கு ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் மீதான ஆர்வத்தால் பல நிறுவனங்களும் போட்டி போட்டி ஐபிஎல் உரிமைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.
இதனால், இந்தியா பங்கேற்கும் இருதரப்பு போட்டிகளுக்கான உரிமைகளை வாங்க ஆர்வம் குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலை டைட்டில் ஸ்பான்சருக்கும் தொடர்ந்ததால் பிசிசிஐ நிறுவனங்களை ஈர்க்க ஏலத்தின் அடிப்படை விலையை குறைத்தது. இதையடுத்து மும்பையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நடந்த இறுதி ஏலத்தில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது.
செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் இருந்து இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிசிசிஐ ரூ.987.84 கோடி வருவாய் ஈட்ட உள்ளது.