வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், அதற்கான வீரர் தேர்வு குறித்து விவாதிக்க தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கு முன், இந்த மாத தொடக்கத்தில் மூத்த ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்ட அகர்கர், உலகக்கோப்பைக்கான 20 வீரர்களைக் கொண்ட முக்கிய குழுவை இறுதி செய்ய ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள விரும்புகிறார். இதற்காக வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அகர்கர், ஜூலை 27 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அணியுடன் இணைய உள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் கேஎல் ராகுல் நிலைமை குறித்து இறுதி முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை நடக்க உள்ள அதே நேரத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இளம் இந்திய அணி பங்கேற்க உள்ளதால், உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் ஜஸ்ப்ரித் பும்ராவின் உடற்தகுதி நிலை குறித்தும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக அவர் அயர்லாந்து செல்ல முடியுமா இல்லையா என்பது குறித்தும் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் அஜித் அகர்கர் கலந்தாலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. மேலும் ஐபிஎல்லின் போது, காயமடைந்த கே.எல்.ராகுலின் நிலை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, உலகக்கோப்பைக்கு பிறகு அணிகளில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு, இளம் வீரர்களை இணைப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.