BANvsNZ : நியூசிலாந்து அபார வெற்றி; மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து வங்கதேசம் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹ்மான் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்த நிலையில், மஹ்முதுல்லா 41 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 40 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் மற்றும் மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
43 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து
246 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா வெறும் 9 ரன்களில் அவுட் ஆனாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக டெவோன் கான்வே 45 ரன்கள் எடுத்தார். கேன் வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர், டேரில் மிட்செல் கடைசி வரை அவுட் ஆகாமல் 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம், 42.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது.