BANvsAFG : 45 ரன்களில் 8 விக்கெட் ஸ்வாஹா; 156 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ஆப்கானிஸ்தான்
தரம்சாலாவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் 3வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கான் கிரிக்கெட் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங்கில் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இப்ராஹிம் சத்ரன் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ரஹ்மத் ஷா 18 ரன்களில் வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்தபோது, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 47 ரன்களில் வெளியேற ஆட்டம் திசை மாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சுருண்ட ஆப்கானிஸ்தான்
ரஹ்மனுல்லா குர்பாஸ் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் திசை மாறி, வங்கதேச கிரிக்கெட் அணியின் அபார பந்துவீச்சில் வீழ்ச்சியை சந்தித்தது. 25வது ஓவரில் 112வது ரன்னுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான், 37.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது. அதாவது, கடைசி 45 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எனும் எளிய இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.