'மனைவி வேலை செய்வது சமுதாய சீரழிவு' : வங்கதேச இளம் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை பதிவு
வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான தன்சிம் ஹசன் ஷாகிப், 2023 ஆசியக் கோப்பையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். குறிப்பிடத்தக்க வகையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் திலக் வர்மா உட்பட முக்கியமான விக்கெட்டுகளைப் பெற்றதற்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில், ஷாகிப்பின் சமீபத்திய புகழ் அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அவரது கடந்தகால பேஸ்புக் பதிவுகள்தான். அதில் ஷாகிப்பின் பக்கத்தில் முழுக்க பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் நிரம்பியுள்ளன. இந்த பதிவுகள் வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் ஷாகிப் பரவலான எதிர்ப்புகளைப் பெற்று வருகிறார்.
மனைவியை வேலை செய்வது சமுதாய சீரழிவு எனக் கூறிய தன்சிம் ஹசன் ஷாகிப்
தன்சிம் ஹசன் ஷாகிப் வெளியிட்டுள்ள ஒரு சர்ச்சைக்குரிய பதிவில், "மனைவி வேலை செய்தால், கணவனின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதில்லை. மனைவி வேலை செய்தால், குழந்தையின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதில்லை. மனைவி வேலை செய்தால், அவரது நடத்தைக்கு சேதம் ஏற்படுகிறது. மனைவி வேலை செய்தால், குடும்பம் அழிகிறது. மனைவி வேலை செய்தால், சமுதாயம் சீரகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அதிக கண்டனங்களை பெற்று வரும் நிலையில், வங்கதேச பெண்ணுரிமை ஆர்வலர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று வரை முன்னேறிய வங்கதேச கிரிக்கெட் அணி, அதில் இந்தியாவை வீழ்த்தி இருந்தாலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.