எபடோட் ஹொசைன் விலகல்; ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு பின்னடைவு
அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் விலகியுள்ளார். முன்னதாக, முழங்கால் காயம் காரணமாக ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இருந்து விலகியுள்ள எபடோட் ஹொசைன் தனது காயத்திற்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 30) லண்டன் குரோம்வெல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது முழு ஓய்வில் இருக்க வேண்டும் எனக் கூறப்படுவதால், ஒருநாள் உலகக்கோப்பையில் இடம் பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, ஆசிய கோப்பை அணியில் எபடோட்டுக்கு பதிலாக தன்சிம் சாகிப் சேர்க்கப்பட்டுள்ளார்.
எபடோட் ஹொசைன் குறித்து தலைமை தேர்வாளர் மின்ஹாஜுல் அபெடின் கருத்து
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளர் மின்ஹாஜுல் அபெடின், எபடோட் தனது முழங்காலில் அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு விளையாட்டில் இருந்து விலகி இருப்பார் என்று உறுதிப்படுத்தி உள்ளார். அணியின்கேப்டன் ஷகிப் அல் ஹசன், "எபடோட் எங்கள் அணியின் முக்கிய அங்கமாக இருந்தார். இதனால் அவர் இல்லாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது." என ஆசிய கோப்பை தொடருக்கு கிளம்பும் முன் தெரிவித்துள்ளார். எபடோட் ஹொசைன் வங்கதேச அணிக்காக வெறும் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால், அவர் இல்லாதது அணிக்கு நிச்சயம் மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்