BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முகமது நைப் மற்றும் மெஹிடி ஹாசன் ஆகிய இருவரும் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஆனால், முதல் பத்து ஓவர்களுக்குள்ளாகவே நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது வங்கதேசம். ஒன்பதாவது ஓவரில், வங்கதேச அணியின் கேப்டப் சஹிப் அல் ஹசனும், விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரகிமும் கைகோர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
அரைசதம் கடந்த வீரர்கள்:
10வது ஓவரில் தொடங்கி, 30வது ஓவர் வரை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை இருவரும் உயர்த்தினர். 30வது ஓவரில் சஹிப் அல் ஹசன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் சீறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது வங்கதேசம். 37வது ஓவரில் 64 ரன்களைக் கடந்த முஷ்ஃபிகுர் ரகிமும் ஆட்டமிழக்க, 39 ஓவர்களில் 200 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் நஷீம் ஷா ஆகிய இருவரும் முறையே நான்கு மற்றும் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 193 ரன்களுக்குள் சுருண்டது வங்கதேசம். பாகிஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.