விரைவில் பாபர் அசாமின் நெ.1 இடத்திற்கு வேட்டு; தரவரிசையில் ஷுப்மன் கில் அபார முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்டராக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், வாய்ப்பை இழந்துள்ளார். தற்போது பாபர் அசாம் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுப்மான் 847 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஷுப்மன் கில் 74 மற்றும் 104 ரன்கள் எடுத்தார். இன்னும் 22 ரன்கள் எடுத்திருந்தால் பாபரை மிஞ்சியிருப்பார்.
கவனம் ஈர்க்கும் ஷுப்மன் கில்
முன்னதாக, கடந்த வாரம் புதன்கிழமை ஐசிசியால் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ஷுப்மன் கில் 814 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அப்போது பாபர் அசாமை விட 43 புள்ளிகள் பின்தங்கி இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இரண்டாவது இடத்தை தக்கவைத்ததோடு, 847 புள்ளிகளை பெற்று முதலிடத்தை நெருங்கியுள்ளார். அடுத்து நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில், ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பாபர் அசாமின் நம்பர் 1 இடம் ஷுப்மன் கில் வசம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.