AUSvsENG : திடீரென நாடு திரும்பிய மிட்செல் மார்ஷ்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து திடீரென நாடு திரும்பியுள்ளார். புதன்கிழமை (நவம்பர் 1) ஆஸ்திரேலியாவின் பெர்த்துக்கு கிளம்பிய மிட்செல் மார்ஷ், மீண்டும் இந்தியா திரும்பி போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் ஆஸ்திரேலிய அணியின் எஞ்சியுள்ள லீக் போட்டிகளிலும், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் அதிலும் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. மிட்செல் மார்ஷ் நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 37.50 சராசரியில் 225 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னருடன் இணைந்து 259 ரன்களின் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் 121 ரன்கள் இவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்து பின்னடைவு
சனிக்கிழமை (நவம்பர் 4) அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஏற்கனவே விலகியுள்ளார். இந்நிலையில், தற்போது மிட்செல் மார்ஷும் விலகியுள்ளது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் டிராவிஸ் ஹெட் அணிக்குத் திரும்பி சிறப்பாக செயல்பட்டு வருவதால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமாளித்து விடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நினைப்பதாகக் கூறப்படுகிறது. கிளென் மேக்ஸ்வெல் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் எனக் கூறப்படும் நிலையில், மிட்செல் மார்ஷ் அடுத்த இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.