AUSvsAFG : ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுத்தது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து ஆப்கான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் ஜத்ரான் அபாரமாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் 129 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
291 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான்
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் ஜத்ரான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். மேலும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷீத் கான் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 3 சிக்சர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.