AUSvsAFG : தனியொருவனாக போராடி வென்ற கிளென் மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, ஆப்கான் கிரிக்கெட் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரானின் 129 ரன்கள் மூலம், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. இப்ராஹிம் சத்ரான் இந்த சதத்தின் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
292 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் டிராவிஸ் ஹெட் டக்கவுட் ஆகி வெளியேறினார். மேலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பாட் கம்மின்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 46.5 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அபாரமாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து 201 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.