வெளியிடுவதும் ரத்து செய்வதும் தொடர்கதையா? தமிழக அரசின் வரிசையான அரசாணை ரத்துகள்; விரிவான பின்னணி
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு சமீபகாலமாக பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான அரசாணைகளை அவசர அவசரமாக வெளியிட்டு, பின்னர் மக்களின் எதிர்ப்பிற்குப் பயந்து அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று வருகிறது. பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம், ஆர்டிஐ சட்டக் கட்டுப்பாடு, செய்யாறு நில எடுப்பு மற்றும் கலைக்கல்லூரி சுற்றறிக்கை என வரிசையாகப் பல ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்தத் தொடர் பின்வாங்கல்களை நெட்டிசன்கள் "இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே" எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.
அரசாணை ரத்துகள்
தலைமைச் செயலகம், ஆர்டிஐ மற்றும் செய்யாறு நில எடுப்பு ரத்து
சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வெளியிட்ட அரசாணை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலியல் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
அதேபோல், சட்டம்-ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ வரம்பிலிருந்து விலக்கும் அரசாணையும் எதிர்க்கட்சிகளின் கடும் கொந்தளிப்பால் ரத்து செய்யப்பட்டது.
மேலும், செய்யாறில் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிட்ட சிப்காட் நில எடுப்பு அரசாணையும் விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் அரசு திரும்பப் பெற்றது.
நிறுத்தம்
மாணவர்கள் கட்டுப்பாடு மற்றும் பைக் டாக்ஸி வழிகாட்டுதல்கள் நிறுத்தம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும், மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பால் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.
மற்றொருபுறம், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் எதிர்ப்பால் பைக் டாக்ஸி தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விரிவான கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி கிடையாது என அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
நெட்டிசன்களின் கலாய்ப்பும் நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களும்
ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் போதிய ஆய்வுகளும், பாதிக்கப்படும் மக்களிடம் கருத்துக்கேட்பும் நடத்தாமல் அரசாணை வெளியிடுவதும், பின்னர் எதிர்ப்பு வந்ததும் பின்வாங்குவதும் அரசின் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
"அரசாணை போடுறதும் அப்புறம் அதை வாபஸ் வாங்குறதும் தான் இப்போதைய மெயின் வேலையா?" என இணையத்தில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு மக்கள் தங்களின் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.