BAN vs AUS: மிட்சல் மார்ஷின் அதிரடியுடன் எளிதாக இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 43வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் அனைத்து பேட்டர்களும் தங்களால் ஆன சிறிய பங்களிப்பைச் செய்ய, தௌஹித் ஹிரிதாய் மற்றும் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ உள்ளிட்டோரின் சற்று சிறப்பான ஆட்டத்துடன் 300 என்ற இலக்கைக் கடந்தது வங்கதேசம். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களான சீன் அபாட் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களைக் குவித்தது வங்கதேச அணி.
மிட்சல் மார்ஷின் அதிரடி:
307 என்ற பெரிய இலக்கை இதுவரை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா சேஸ் செய்ததில்லை. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் 10 ரன்கள் குவிப்பிற்கு மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து விட, அதன் பிறகு களமிறங்கிய மிட்சல் மார்ஷை வங்கதேச அணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 134.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஒருபுறம் அதிரடியாக ஆடிய மிட்சல் மார்ஷூக்கு, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அடுத்தடுத்து பக்க பலமாக மட்டுமே நின்றனர். முடிவில் 44.4 ஓவர்களில் மிட்சல் மார்ஷின் 177 ரன்கள் உதவியுடன் வெறும் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சேஸ் செய்தது ஆஸ்திரேலியா.