ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் காலிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா: அட்டவணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்று அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கும் முதல் காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து, அதே நாளில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆடுகளத்தின் சவால்
காலிறுதிப் போட்டிகள் மற்றும் சுழற்பந்து வீச்சு
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் இலங்கை - நேபாள அணிகள் இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கும், கடைசி காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் - மலேசியா அணிகள் காலை 10:00 மணிக்கும் களமிறங்குகின்றன.
லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற அதே மைதானத்திலேயே காலிறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.
முந்தைய ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறிய சூழலில், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தினர்.
ஆப்கானிஸ்தான் அணியில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளதால், அபிஷேக் சர்மா உள்ளிட்ட அதிரடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளம் கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டவணை
முந்தைய இறுதிப்போட்டி வரலாறு
கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளே மோதின.
அப்போது ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு, சர்வதேசத் தரவரிசையின் அடிப்படையில் இந்தியாவிற்குத் தங்கமும், ஆப்கானிஸ்தானுக்கு வெள்ளியும் வழங்கப்பட்டது. தற்போது இவ்விரு அணிகளும் காலிறுதியிலேயே மோதுவதால் பாகிஸ்தான் அல்லது இலங்கை அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கூடுதல் வாய்ப்பு உருவாகியுள்ளது.
காலிறுதியைத் தொடர்ந்து அக்டோபர் 1-ஆம் தேதி அரையிறுதிப் போட்டிகளும் (காலை 5:30 மற்றும் 10:00 மணி), அக்டோபர் 3-ஆம் தேதி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் (காலை 5:30 மணி) மற்றும் தங்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டி (காலை 10:30 மணி) நடைபெறவுள்ளன.