41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி
சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆடவர் ஹாக்கி போட்டியின் குழுநிலை ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 11, 17, 33 மற்றும் 34வது நிமிடங்களில் கோல் அடிக்க, வருண் குமார் 41வது மற்றும் 54வது நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார். மேலும், மந்தீப் சிங் 8வது, சுமித் 30வது, சம்ஷர் சிங் 46வது மற்றும் லலித் குமார் உபாத்யாய் 49வது நிமிடங்களில் கோல் அடித்தனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் சார்பில் முகமது கான் 38வது மற்றும் அப்துல் ரானா 45வது நிமிடங்களில் கோல் அடித்தனர்.
வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது இந்தியா
பாகிஸ்தான் கடைசி வரை போராடியும் இந்தியாவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால், இறுதியில் 10-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டியில் இந்தியா 8 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது இதுதான் முதல்முறையாகும். முன்னதாக, 2017இல் பாகிஸ்தானுக்கு எதிராக 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியா பெற்றதே மிகப்பெரிய வெற்றி வித்தியாசமாக இருந்தது. இதற்கிடையே, 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது அதன் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. இந்நிலையில், தற்போதைய வெற்றி மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்கு இந்தியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.