மனு பாக்கர், பவன் ஷெராவத் தலைமையில் இந்திய அணி! 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் முறைப்படி தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் அய்சி-நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மிகப்பிரமாண்டமாக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. நகோயாவில் உள்ள மிஸுஹோ பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற வண்ணமயமான தொடக்க விழாவில், ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய அணி
இந்திய அணியை வழிநடத்திய மனு பாக்கர் மற்றும் பவன் ஷெராவத்
நாடுகளின் அணிவகுப்பின் போது இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் கௌரவத்தைப் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி நட்சத்திர வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் பெற்றனர்.
தொழில்நுட்பக் காரணங்களால் தஜேந்தர்பால் சிங் தோர் பங்கேற்க முடியாமல் போனதால், அவருக்குப் பதிலாகப் பவன் ஷெராவத் கடைசி நேரத்தில் கொடி ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்திய விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
501 வீரர்கள்
501 வீரர்கள் அடங்கிய இந்தியப் படை மற்றும் போட்டிகளின் இலக்கு
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 501 விளையாட்டு வீரர்கள் அடங்கிய மிகப்பெரிய குழு 36 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்குகிறது.
கடந்த ஹங்சோ ஆசியப் போட்டிகளில் 28 தங்கம் உட்பட 106 பதக்கங்களை வென்று படைத்த வரலாற்று சாதனையை விட இம்முறை அதிக பதக்கங்களைக் கைப்பற்றுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.
தொடக்க விழாவிற்கு முன்பாகவே இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது.
45 நாடுகள்
45 நாடுகள் மற்றும் 11,000 வீரர்கள் பங்கேற்கும் பிரமாண்ட விளையாட்டுத் திருவிழா
இப்போட்டியில் ஆசியாவை சேர்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 11,000 வீரர்கள் பங்கேற்று 43 விளையாட்டுப் பிரிவுகளில் 469 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.
செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில் வழக்கமான ஒலிம்பிக் போட்டிகளுடன் கபடி, டெக்பால் மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் ஆகிய அதிநவீன போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதல் தங்கப் பதக்கத்திற்கான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன.