2026 ஆசிய விளையாட்டு பேட்மிண்டன்: காலிறுதியோடு வெளியேறிய இந்திய மகளிர் அணி
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் பேட்மிண்டன் காலிறுதிச் சுற்றில் இந்திய அணி போட்டியை நடத்தும் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சிக்கு எதிரான முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அபாரமாகத் தொடங்கினார். முதல் கேமை 23-21 எனக் கைப்பற்றிய போதிலும், அடுத்தடுத்த கேம்களில் ஆதிக்கத்தைத் தொடர முடியாமல் 23-21, 18-21, 6-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார்.
உன்னதி ஹூடா தோல்வி
இரட்டையர் பிரிவில் நம்பிக்கை தந்த ஜோலி - காயத்ரி
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் இளம் வீராங்கனை உன்னதி ஹூடா, 2022 ஜூனியர் உலக சாம்பியனும் தற்போதைய உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளவருமான ஜப்பானின் தோமோகா மியாசாகியிடம் நேர் கேம்களில் தோல்வியடைந்தார்.
இதனால் ஜப்பான் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. எனினும், அடுத்து நடைபெற்ற முதல் மகளிர் இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற த்ரீசா ஜோலி - காயத்ரி கோபிசந்த் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஜப்பானின் யூகி புகுஷிமா - மாயு மட்சுமோட்டோ இணையை நேர் கேம்களில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம், போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையை இக்கூட்டணி உயிர்ப்புடன் வைத்திருந்தது.
தன்வி சர்மா சறுக்கல்
பதக்க வாய்ப்பை இழந்த இந்திய அணி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி சர்மா, முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் தன்வி சர்மா நேர் கேம்களில் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் ஜப்பான் அணி 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதி தோல்வியைத் தொடர்ந்து இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளதுடன், நடப்புத் தொடரில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்குப் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் முழுமையாகக் கைநழுவியுள்ளது.