ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளி, ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலம் வென்று அசத்தல்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் தங்களின் அபார பதக்க வேட்டையைத் தொடர்ந்துள்ளனர். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர். போட்டியின் பெரும்பகுதி நேரம் முதலிடத்தில் நீடித்து இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை நோக்கி நகர்ந்த ருத்ராங்க்ஷ் பாட்டீல், கடைசி கட்டத்தில் 9.7 புள்ளிகள் மட்டுமே பெற்று 230.9 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றார். ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். சீனாவின் ஷெங் லிஹாவ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பதக்கம்
ஆடவர் குழு பிரிவிலும் வெள்ளிப் பதக்கம்
தனிநபர் பிரிவுக்கு முன்னதாக நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.
ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷு தில்லான் மற்றும் பார்த்த் மானே ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி மொத்தம் 1890.1புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
1899புள்ளிகள் குவித்த சீனாவின் ஷெங் லிஹாவ், மா சிஹான் மற்றும் ஜாங் சாங்ஹாங் கூட்டணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் செப்டம்பர்21 அன்றைய ஒரே நாளில் துப்பாக்கிசசுடுதல் பிரிவில் இந்திய அணி 3 பதக்கங்களை குவித்துள்ளது.
முன்னதாக மகளிர் பிரிவில் இளவேனில் வளரிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் குழு வெள்ளி வென்றதும், தனிநபர் பிரிவில் இளவேனில் வளரிவன் வெள்ளி வென்றதும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாக குளறுபடி
கடும் நிர்வாகக் குளறுபடிகளைத் தாண்டி படைத்த சாதனை
ஜப்பான் மண்ணில் காலடி வைத்தது முதலே தங்குமிடம், போக்குவரத்து மற்றும் பயணக் குளறுபடிகள் எனப் பல்வேறு கடுமையான இடர்பாடுகளை இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி எதிர்கொண்டது.
விமான நிலையத்தில் பல மணி நேரம் பேருந்துக்காகக் காத்திருக்க வைக்கப்பட்டதோடு, ஒதுக்கப்பட்ட வசதியான விடுதிக்கு மாறாக வேறு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் பயிற்சி மைதானத்திற்குச் செல்ல 80 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என அமைப்பாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீரர்களின் பயிற்சிகள் பாதிக்கப்பட்டன.
இத்தகைய தீவிர பின்னடைவுகளையும் மன உளைச்சல்களையும் கடந்து, இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து அடுத்தடுத்து பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.