Loading...
கோலாகலமாக நிறைவடைந்தது ஆசிய விளையாட்டு 2026: தேசியக் கொடியை ஏந்திய நீரு தண்டா!
தேசியக் கொடியை ஏந்திய நீரு தண்டா

கோலாகலமாக நிறைவடைந்தது ஆசிய விளையாட்டு 2026: தேசியக் கொடியை ஏந்திய நீரு தண்டா!

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
06:38 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 16 நாட்களாக நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த 2030 ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் கத்தாரிடம் ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்புக் கொடி ஒப்படைக்கப்பட்டது. ஆசிய கண்டத்தின் விளையாட்டுத் திருவிழாவான 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பான் நாட்டின் ஐச்சி மற்றும் நகோயா நகரங்களில் கடந்த 16 நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று பலோமா மிசுஹோ தடகள மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. லேசர் ஒளி வெள்ளம், பார்கூர் கலைஞர்களின் சாகசங்கள் மற்றும் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மைதானம் விழாக்கோலம் பூண்டது. ஆசிய நாடுகளின் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு 'ஒரே ஆசியா' என்ற உணர்வுடன் வலம் வந்து ரசிகர்களுக்கு விடைகொடுத்தனர்.

4-வது இடத்தில் இந்தியா

தேசியக் கொடியை ஏந்தி வழிநடத்திய நீரூர் தண்டா

இத்தொடரில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை அள்ளி பதக்கப் பட்டியலில் கம்பீரமாக 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி, நிறைவு விழாவிலும் தனிச் சிறப்பைப் பெற்றது.

நடப்பு தொடரில் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கம் உட்பட 2 தங்கம், 1 வெள்ளி வென்று வரலாறு படைத்த நட்சத்திர வீராங்கனை நீரூர் தண்டா, இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை கம்பீரமாக வழிநடத்தினார்.

இந்திய விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் மூவர்ணக் கொடியை அசைத்தபடி மைதானத்தை வலம் வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்

டோஹா 2030-க்குக் கைமாறிய ஆசிய விளையாட்டு

நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) தலைவர் ஷேக் ஜோன் பின் ஹமத் அல் தானி முன்னிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு ஒலிம்பிக் கவுன்சில் கொடி இறக்கப்பட்டது.

தொடர்ந்து, அடுத்த 21-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை 2030-ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் டோஹாவில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ கொடி ஒப்படைப்பு நடைபெற்றது.

கத்தாரின் சார்பாக ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் சாம்பியன் முதாஸ் எஸ்ஸா பார்ஷிம் இக்கொடியைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டோஹாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதால், விளையாட்டு உலகம் அடுத்ததாகக் கத்தாரை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

ADVERTISEMENT