கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்ட இந்தியா; டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் சீனாவை அபாரமாக வீழ்த்திய இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானுடன் டிரா செய்தது. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) நடந்த முதல் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி, வெள்ளிக்கிழமை தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானிடமும் ஆதிக்கம் செலுத்தியது. போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, தொடர்ந்து கோல் அடிக்க பல வாய்ப்புகளை பெற்றதோடு, 16 ஷார்ட் கார்னர்களை பெற்றது. எனினும், அவற்றை கோலாக மாற்ற முடியாததால் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணியை காப்பாற்றிய ஹர்மன்ப்ரீத்
போட்டி தொடங்கியது முதலே தாக்குதல் ஆட்டத்தை விளையாடிய இந்திய அணியை எதிர்கொள்ள முடியாமல் ஜப்பான் அணி தத்தளித்தது. ஆனால், ஒற்றுமையின்மை மற்றும் பெரும்பாலான வீரர்கள் சரியான இடத்தில் இல்லாமல் இருப்பது அணியை வீழ்த்தியது. ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங் போன்ற முன்கள வரிசையில் உள்ள மூத்த வீரர்கள் மீண்டும் மீண்டும் தடுமாறினர். விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா மற்றும் சுமித் ஆகியோர் கடுமையாக முயற்சி செய்தும் எதுவும் பயனில்லை. இந்தியா மொத்தம் 16 ஷார்ட் கார்னர்களை பெற்றாலும், அவற்றில் 15ஐ வீணடித்தது. இறுதியாக 43வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் கோல் அடித்து இந்தியாவை காப்பாற்றினார். இதற்கிடையே, ஜப்பானும் ஒரு கோல் அடிக்க, இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது.