ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) கொழும்பில் நடைபெற உள்ளது. இருப்பினும், வானிலை கணிப்புகளின்படி, போட்டியின்போது மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த வாரம் பல்லேகலேயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் மழையால் கைவிடப்பட்டது. அதுபோன்ற நிலை, இந்த போட்டிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் நாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளின் போட்டிகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியை ஹம்பந்தோட்டைக்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
சூப்பர் 4 சுற்று போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்குள்ள காலநிலை கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் போட்டிகளை ஹம்பந்தோட்டைக்கு மாற்றலாம் என போட்டியை நடத்தும் அதிகாரப்பூர்வ நாடான பாகிஸ்தான் ஆலோசனை தெரிவித்தது. ஆனால் ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அந்த ஆலோசனையை நிராகரித்து அனைத்து போட்டிகளும் கொழும்பிலேயே நடக்கும் எனக் கூறியுள்ளதோடு, பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதும் போட்டிக்கு செப்டம்பர் 11ஆம் தேதியை ரிசர்வ் நாளாக அறிவித்துள்ளது. மேலும். செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.