ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பாதியில் 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது இருவரும் சதமடித்ததோடு, ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 214 ரன்கள் எடுத்தனர். பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது.
104 ரன்களுக்கு சுருண்டது நேபாள கிரிக்கெட் அணி
343 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாள கிரிக்கெட் அணி ஆரிப் ஷேக் (26), சோம்பல் கமி (28) மற்றும் குல்ஷன் ஜா (13) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், 23.4 ஓவர்களில் 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய ஷதாப் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது அதிக ரன் வித்தியாச வெற்றியை பதிவு செய்தது.