SL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல்
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2023 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 164 ரன்களுக்கு சுருண்டது.
இதில், வங்கதேச அணியின் டாப்-ஆர்டர் பேட்டர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனி ஒருவனாக கடைசி வரை போராடி 122 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார்.
வேறு எந்த வங்கதேச வீரரும் இதில் 20 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
najmul hossain breaks 3 records
போட்டியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்த சாதனைகள்
தனது 89 ரன்கள் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வடிவில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வங்கதேச வீரர் என்ற சாதனையை நஜ்முல் ஹொசைன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், முஷ்பிகுர் ரஹீம் (துபாயில் 144, 2018) மட்டுமே நஜ்மலை விட முன்னிலையில் உள்ளார்.
மேலும், வங்கதேச அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி ஒரு இன்னிங்சில் இலங்கைக்கு எதிராக அதிக ரன் அடித்தவர் என்ற சாதனையையும் செய்துள்ளார்.
இதற்கு முன்னர், முகமது அஷ்ரப் 2010இல் 75 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதனுடன் ஒட்டுமொத்தமாக ஒருநாள் வடிவ ஆசிய கோப்பையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கி, மூன்றாவது அதிக ரன் சேர்த்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.