ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைப் போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் நடத்தப்படும் போட்டியாக இது அமைந்துள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் ஒன்பது போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் சென்று விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததால், போட்டியை நடத்துவது குறித்த முடிவை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை
ஆசிய கோப்பை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில், "2023 சீசன் தலா 3 அணிகளை கொண்ட இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தை மிகச்சிறந்த முறையில் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வரவேற்பதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்." என்று தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் நிலையில், இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.