'சர்ச்சைக்கு இடமில்லை, அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டும்' : அஸ்வின் ரவிச்சந்திரன்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், போட்டியின் கடைசி நாளின் முதல் அமர்வில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ அவுட்டான விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்னவெனில், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தனது ஓவரின் கடைசி பந்தை வீசியபோது, ஸ்ட்ரைக்கில் பேர்ஸ்டோ இருந்தார். அந்த பந்தை அடிக்காததால் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பந்து சென்ற நிலையில், ஓவர் முடிந்ததாக நினைத்த பேர்ஸ்டோ எதிர்முனையில் உள்ள மற்றொரு பேட்டரிடம் பேச செல்கிறார். இதை கவனித்த அலெக்ஸ் கேரி, உடனடியாக ஸ்டம்ப்பிங் செய்ய, அது அவுட் என அறிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய அவுட் குறித்து அஸ்வின் கருத்து
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, "அதே பழைய ஆஸ்திரேலியா, எப்போதும் ஏமாற்றுவதுதான் வேலை" என்ற கோஷங்கள் எழுந்தாலும், இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், கேரியின் விழிப்புணர்வை பாராட்டி, அவுட்டை நியாயப்படுத்தி பேசியுள்ளார். இது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ள அஸ்வின், "ஒரு உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பேர்ஸ்டோவைப் போல் ஒரு பேட்டர் பந்துவீசிய பிறகு தனது கிரீஸை விட்டு வெளியேறுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததை அவரும் அவரது குழுவினரும் கவனித்திருந்தால் ஒழிய, ஒரு டெஸ்ட் போட்டியில் இப்படி ஸ்டம்பிங் செய்ய முடியாது. இதை சர்ச்சையாக பார்க்காமல் தனிநபரின் விளையாட்டின் புத்திசாலித்தனத்தை நாம் பாராட்ட வேண்டும்." என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அவரது கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.