ஆஷஸ் 2023 : மொயீன் அலிக்கு மாற்று வீரராக ரெஹான் அகமதுவை அணியில் இணைத்த இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமதுவை அணியில் இணைத்துள்ளதாக இங்கிலாந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்திருக்கிறது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, மூத்த வீரர் மொயீன் அலி தனது விரலில் காயம் அடைந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ரெஹான் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
18 வயதான சுழல் ஆல்ரவுண்டர் ரெஹான் அகமது கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் விளையாடிய ஒரே போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
reason behind moeen ali return after retirement
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மொயீன் அலி திரும்ப வந்ததன் பின்னணி
ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணியில் முதலில் சேர்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் காயத்தால் தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறியதை அடுத்து மாற்று வீரராக ரெஹான் அகமது பரிசீலனைக்கு வந்தார்.
ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2021இல் ஓய்வு பெற்ற மொயீன் அலியை முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திரும்ப அழைத்து வந்தது.
மொயீன் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரை வீழ்த்தியதோடு, இரண்டு இன்னிங்ஸ்களிலும் 37 ரன்கள் எடுத்தார்.
ஆனால் அவரது விரலில் ஏற்பட்ட காயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொயீன் அலியின் இடத்தை ரெஹான் அகமது பூர்த்தி செய்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.