ஐந்து விக்கெட் சாதனைக்கு உதவிய கேஎல் ராகுல்; அர்ஷ்தீப் சிங் நெகிழ்ச்சி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில், இந்தியாவுக்காக விளையாடிய தனது முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் எதுவும் எடுக்காததோடு, ரன்களை வாரி வழங்குகிறார் என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் இதில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாதனை செய்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்
தென்னாப்பிரிக்காவில் வைத்து அந்த அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் செய்தார். மேலும், தென்னாப்பிரிக்காவில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் இதன் மூலம் பெற்றார். இந்நிலையில், போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியில் பேசிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப், முந்தைய போட்டிகளில் மோசமாக விளையாடினாலும், அதிலிருந்து மீண்டுவந்து மறக்கமுடியாத மறுபிரவேசத்தை செய்ததற்கு கேப்டன் கேஎல் ராகுல் உதவியதாக பாராட்டினார். இந்நிலையில், இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது.