நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்
ஹங்கேரியில் நடந்து முடிந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார். இதேபோல், இந்த போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளி வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். நீரஜ் சோப்ரா இந்தியாவின் தங்க மகனாக வலம் வரும் அதே வேளையில், அர்ஷத் சர்வதேச அரங்கில் தனது செயல்திறன் மூலம் பாகிஸ்தானுக்கு பல விருதுகளை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அர்ஷத்தின் அப்பா, ஈட்டி எறிதல் நிகழ்வுகளுக்குத் தன்னைத் தயார்படுத்துவதற்காக, வீட்டில் நீரஜின் வீடியோக்களை அர்ஷத் அடிக்கடி பார்ப்பார் என தெரிவித்துள்ளார்.
அர்ஷத்தின் அப்பா முகமது அஷ்ரப் பேட்டி
அர்ஷத்திற்கு முதலில் ஈட்டி எறிதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முடியாதவராக இருந்தார் என்றாலும், தனது விளையாட்டின் மூலம் பாகிஸ்தானுக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறினார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், "போட்டியன்று இரவு எங்கள் கிராமம் முழுவதும் அர்ஷத் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் உட்பட அனைவரும் காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அர்ஷத் உலக அளவில் பதக்கம் வெல்வதைப் பார்க்காமல் இருப்பதை நான் விரும்பவில்லை." எனக் கூறினார். மிகவும் ஏழ்மை பின்னணியைக் கொண்டிருந்தாலும் அர்ஷத்திற்கு மட்டும் வீட்டில் பால் மற்றும் நெய் வழங்கி வந்ததாகவும் அவரது அப்பா மேலும் கூறினார்.