ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அடுத்த சீசனுக்கு தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவரை நியமித்துள்ளது. ஆர்சிபி அணி தனது சமூக ஊடக பதிவின் மூலம் இந்த நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அணியிலிருந்து விடைபெறும் இயக்குனர் மைக் ஹெசன் மற்றும் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கருக்கு நன்றி தெரிவித்து தனியாக ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளது. பயிற்சியாளராக சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள ஆண்டி ஃப்ளவர், 2010 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றபோது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் 2009-2013 வரை மூன்று ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்து அணிக்கு உதவினார்.
பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் ஆண்டி ஃப்ளவரின் அனுபவம்
ஆண்டி ஃப்ளவர் ஐபிஎல்லில் 2022 மற்றும் 2023 சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து அந்த அணியை பிளேஆப் சுற்று வரை முன்னேற்றினார். மேலும், முல்தான் சுல்தான்கள், ட்ரெண்ட் ராக்கெட்ஸ், மராத்தா அரேபியன்ஸ் மற்றும் கல்ப் ஜெயன்ட்ஸ் அணிகளின் பயிற்சியாளராக இருந்து, அந்த அணிகள் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் வலுவான அணிகளில் ஒன்றாக ஆர்சிபி கருதப்பட்டாலும், இதுவரை அனைத்து சீசன்களிலும் விளையாடி ஒரு பட்டத்தை கூட வெல்ல முடியாத அணியாகவே உள்ளது. அந்த சோக வரலாற்றை மாற்றி, ரசிகர்களின் "ஈ சாலா கப் நமதே' கோஷத்தை 2024 ஐபிஎல் சீசனில் ஆண்டி ஃப்ளவர் நனவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.