
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ₹150 கூலிக்கு மணல் அள்ளியவரா? ஆகாஷ் தீப்பின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப்பின் எழுச்சி என்பது விடாமுயற்சி, தியாகம் மற்றும் மன உறுதியின் சக்திவாய்ந்த கதை என்பது உங்களுக்குத் தெரியுமா? பீகாரின் சசாரம் மாவட்டத்தில் பிறந்த அவருக்கு 19 வயது ஆனபோது, ஆறு மாதங்களுக்குள் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரர் இருவரையும் இழந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், தனது தாய் மற்றும் சகோதரிகளுக்கு ஆதரவாக சோன் நதிக்கரையில் ஒரு நாளைக்கு ₹150க்கு மணல் லாரிகளுக்கு மண் அள்ளும் வேலைக்குச் சென்றதால் அவரது கிரிக்கெட் பின்தங்கியது. எனினும், மூன்று வருட கடின உழைப்புக்குப் பிறகு, ஆகாஷ் தனது கிரிக்கெட் கனவுகளை மீட்டெடுக்க கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்.
நிராகரிப்பு
ஒவ்வொரு இடத்திலும் நிராகரிப்பு
ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும் நிராகரிப்பு மட்டுமே அவரை வரவேற்றது. யுனைடெட் சிசி, ஒய்எம்சிஏ, காளிகாட் போன்ற முன்னணி கிளப்புகள் அவரை வெளியேற்றின. பீகாரைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளரின் திறமையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பெங்கால் விஷன் 2020 திட்டத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பு, சவுரவ் கங்குலியின் ஒப்புதலுடன், ஆகாஷ் தீப்பின் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றியது. அவரது தொழில் வாழ்க்கையை அச்சுறுத்தும் கடுமையான முதுகு காயத்தை எதிர்கொண்ட போதிலும், பயிற்சியாளர் சவுராசிஷ் லஹிரியின் ஆதரவுடன் ஆகாஷின் உறுதியான ஈடுபாடு அவரை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்தது. அவரது பெங்கால் அணி வீரர் முகமது ஷமி அவருக்கு பந்துவீச்சு ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்து வழிகாட்டினார், இது அவரது விளையாட்டு பாணியை வரையறுக்கிறது.
புற்றுநோய்
மூத்த சகோதரிக்கு புற்றுநோய்
2025 ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரி ஜோதிக்கு மூன்றாம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவரது பயணம் மற்றொரு உணர்ச்சிபூர்வமான திருப்பத்தை எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடனான ஐபிஎல் சீசன் முழுவதும், ஆகாஷ் பயிற்சி மற்றும் மருத்துவமனை என போராட வேண்டி இருந்தது. அந்த தொடரில் ஒவ்வொரு விக்கெட்டையும் அவரது போராட்டத்திற்கு அர்ப்பணித்தார். கிரிக்கெட் ஊக்கமளிக்கப்படாத மற்றும் கவனச்சிதறலாகக் கருதப்பட்ட ஒரு ஊரில் இருந்த வந்த ஆகாஷ் தீப்பின் கதை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இந்நிலையில், மணல் ஏற்றுவதில் இருந்து எட்ஜ்பாஸ்டனில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது வரை, அவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வேக பந்துவீச்சு நம்பிக்கையாகவும், அசைக்க முடியாத மன உறுதியின் அடையாளமாகவும் மாறிவிட்டார்.