இங்கிலாந்து-இலங்கை போட்டிக்கு பின் உலக டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்; இந்தியாவின் நிலை என்ன?
பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் ஓவல் மைதானத்தில் 219 ரன்களை துரத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், இந்த வெற்றியின் மூலம் இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 42.85 ரேட்டிங் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையே, இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம், இந்தியா மற்றும் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி ஆறாவது இடத்திற்கு சரிவு
இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் 42.18 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 68.51 ரேட்டிங் புள்ளிகளுடன் யாரும் எட்ட முடியாத உயரத்தில் முதலிடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா 62.50 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி 50.00 ரேட்டிங் புள்ளிகளுடனும், நான்காவது இடத்தில் வங்கதேசம் 45.83 புள்ளிகளுடனும் உள்ளன. மூன்று முதல் ஆறாவது இடம் வரையில் உள்ள அணிகளுக்கு இடையேயான ரேட்டிங் புள்ளிகளின் வித்தியாசம் குறைவாக உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, புள்ளிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன.