'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம்
ஆகஸ்ட் 15, 2021 ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்த பிறகு மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தலிபான்கள் நாட்டில் பெண்கள் விளையாட்டு மற்றும் கல்வியை தடை செய்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் விளையாட்டில், குறிப்பாக மகளிர் கிரிக்கெட் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்நாட்டு மகளிர் அணியில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் ஃபிரூசா அமிரி. தலிபான் ஆட்சிக்கு வந்தபோது வெறும் 18 வயதாக இருந்ததால், அமிரி பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில் தனது அணியில் உள்ள பல வீராங்கனைகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார்.
மீண்டும் விளையாட வாய்ப்பு கோரிய ஃபிரூசா அமிரி
தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், அமிரி சர்வதேச கிரிக்கெட்டில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கனவுடன் இன்னும் உள்ளார். ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட வாய்ப்பு வழங்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு உதவுமாறும் வலியுறுத்தியுள்ளார். உயர் மட்டத்தில் தங்கள் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதில் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அமிரி மற்றும் சில முன்னாள் அணியினர் உள்ளூர் மெல்போர்ன் லீக்கில் விளையாடுகின்றனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி மாபெரும் சாதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தாங்களும் அதே போல் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.