ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. ஆசிய கோப்பைக்கு முன்னதாக, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஆப்கான் அணி 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தொடரில் மூன்றாவது போட்டியில் ஓரளவு தாக்குப் பிடித்தாலும், முதல் போட்டியில் 142 ரன்கள் மற்றும் இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம், அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் காயம் காரணமாக விலகி இருந்ததுதான் எனக் கூறப்பட்டாலும், இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கேப்டனாக ஆப்கான் கிரிக்கெட் அணியை வழிநடத்த உள்ள நிலையில், கரீம் ஜனத் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரை இழந்த ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரான் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 2023 ஆசிய கோப்பைக்கான ஆப்கான் அணி : ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, ரியாஸ் ஹசன், இக்ராம் அலி கில், குல்பாடின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ரஷீத் கான், ஷரபுதீன் அஷ்ரஃப், மு,ஜீப் உர்ரஃப், சுலிமான் சஃபி, ஃபசல்ஹக் ஃபாரூக்கி, நூர் அகமது.