ஆப்கான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள நவீன்-உல்-ஹக் அந்த தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை, இந்த உலகக் கோப்பையின் முடிவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையை நீடிக்க இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.
நவீன்-உல்-ஹக்கின் ஓய்வால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
24 வயதே ஆன நவீன்-உல்-ஹக் மிகத் திறமை வாய்ந்த வீரர் என்பதால், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது திடீர் ஓய்வு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும், நவீன்-உல்-ஹக் தேசிய அணியில் ஒரு முக்கிய நபராக மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக அவரது திறமைகள் மற்றும் முக்கியமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு டி20 கிரிக்கெட்டில் வலுவான நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்கிடையே, ஐபிஎல் 2023 தொடரில் விராட் கோலியுடன் அவரது மோதல் அதிக பிரபலமான நிலையில், அந்த மோதலை இந்த உலகக்கோப்பை தொடரிலும் எதிர்பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.