அதிர்ச்சி : 24 வயதில் தேசிய கைப்பந்து வீராங்கனை மாரடைப்பால் மரணம்!
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் விளையாடிய, 24 வயதே ஆன கர்நாடக வீராங்கனையான சாலியத் புதன்கிழமை (மே 31) அன்று மாரடைப்பால் இறந்தார். கர்நாடகாவின் மங்களூர் படங்கடி பொய்யேகுடேவில் வசித்து வந்த இவர், திருமணமாகி ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாலியத் புதன்கிழமை உயிரிழந்தார். சாலியத் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சாலியத் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கைப்பந்து விளையாடி, பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் கர்நாடகா சார்பாக பங்கேற்றுள்ளார்.
சாலியத்தின் கைப்பந்து பின்னணி
ஆரம்பத்தில், சாலியத் ஹைதர் படங்கடி என்பவரிடம் கைப்பந்து போட்டிக்கான பயிற்சி பெற்ற நிலையில், முண்டாஜே உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, உடற்கல்வி ஆசிரியர் குணபால் எம்எஸ்ஸிடம் பயிற்சி பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடகா மாநிலம் இரண்டாமிடம் பெற முக்கிய காரணமாக இருந்தார். பின்னர், அவர் எஸ்டிஎம் உஜிரேயில் பியு மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் போது, கர்நாடக அணியின் வாலிபால் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். எஸ்டிஎம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனரான ரமேஷ், சாலியாத்தை தேசிய அளவிலான கைப்பந்து வீரராக வளர்ப்பதில் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். சாலியாத் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கத்தையும், தென்னிந்திய அளவில் தங்கப் பதக்கத்தையும், யூத் நேஷன்ஸ் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தார்.