கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை; முதல் ஓவரிலேயே 0/3 என சரிந்தது இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி எதிர்பாராத மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 334 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவர் முடிவில் ஒரு ரன் கூட எடுக்காமல் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தனது முதல் 3 விக்கெட்டுகளை 0 ரன்னில் இழப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
ரோஹித் - கோலி ஏமாற்றம்
முதல் பந்திலேயே ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி
334 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பின் ஆலனிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆனார்.
இதையடுத்து மூன்றாவது வரிசையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி நிதானமாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கோலி நான்கு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல், ஓவரின் ஐந்தாவது பந்தில் கிளீன் போல்டாகிப் பெவிலியன் திரும்பினார்.
இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
கேப்டன்
கேப்டன் பதவியில் முதல் போட்டியிலேயே கோல்டன் டக் ஆன ஷ்ரேயாஸ் ஐயர்
விராட் கோலி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்தார்.
இந்திய அணியின் கேப்டனாகத் தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அவர், எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் மூலம் ரோஹித் ஷர்மாவைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஒரே ஓவரில் இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்களும் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தது ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றியது.
ஐந்தாவது நிகழ்வு
மேட் ஹென்றியின் அபார பந்துவீச்சும் ஒருநாள் கிரிக்கெட்டின் ஐந்தாவது நிகழ்வும்
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி துல்லியமாக பந்துவீசி முதல் ஓவரிலேயே மெய்டன் உடன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அவரது அபார பந்துவீச்சால் இந்திய அணி 0 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி தனது முதல் மூன்று விக்கெட்டுகளை 0 ரன்னில் இழப்பது இது ஐந்தாவது முறையாகும்.
இத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து இந்திய அணி மீண்டு வருவது மிகப்பெரிய சவாலாக மாறியது.