ரீல்ஸ் மற்றும் டிக்டாக்குக்குப் போட்டியாக Shorts-ல் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் யூடியூப்
உலகளவில் தற்போது நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமான ஒரு ஃபார்மெட்டாக இருப்பது ஷார்ட் வீடியோ ஃபார்மெட் தான். உள்ளடக்க தயாரிப்பாளர்கள் தாங்கள் சொல்ல வரும் விஷயத்தை ஷார்ட்டாகவும், வசீகரிக்கும் வகையிலும் சொல்ல இந்த ஷார்ட் வீடியோ ஃபார்மெட் பயன்படுகிறது. இந்த ஷார்ட் வீடியோ தளத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்குப் போட்டியாக தங்களது ஷார்ட்ஸ் சேவையிலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது யூடியூப். இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வழங்கப்படுவது போல க்ரீன் ஸ்கிரீன், கட் மற்றும் கொலாப் ஆகிய கருவிகளை தங்களுடைய ஷார்ட்ஸ் சேவையிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது யூடியூப்.
லைவ் வீடியோ வசதியை அறிமுகம் செய்யவிருக்கும் யூடியூப்:
அதனைத் தொடர்ந்து டிக்டாக்கில் மிகவும் பிரபலமான வசதியான லைவ் வீடியோ வசதியையும் ஷார்ட்ஸில் வழக்கத் திட்டமிட்டு வருகிறது யூடியூப். பயனர்கள் இந்த லைவ் வீடியோ ஆப்ஷனைத் தேர்வு செய்யும் போது, லைவ் வீடியோக்களை மட்டுமே கொண்ட தனி பக்கத்திற்கு கூட்டிச் செல்லும் வகையில் இதனை வடிவமைத்து வருகிறது யூடியூப். மேலும், யூடியூப் பார்ட்னர்ஸ் ப்ரோக்கிராம் மூலம் வருவாயைப் பெற குறைந்தபட்ச அளவுகோள்களையே இந்த லைவ் வீடியோவுக்கு விதிக்கவிருக்கிறது யூடியூப். கடந்த 2020-ம் ஆண்டு முதல் முறையாக ஷார்ட்ஸை அறிமுகப்படுதியது யூடியூப். தற்போது 2 மில்லியன் மாதாந்திர பயனாளர்களைக் கொண்டிருக்கிறது ஷார்ட்ஸ் சேவை. மேற்கூறிய புதிய வசதிகளின் அறிமுகங்கள் மூலம், ஷார்ட்ஸ் பயனர்களை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.