எக்ஸ் தளத்தில் வருகிறது பணப்பரிமாற்ற சேவை; ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்
ட்விட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் எலோன் மஸ்க், அதை இன்னும் விரிவான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செயல்படுத்த முயற்சி செய்கிறார். அந்த வகையில், எக்ஸ் தளத்திற்கு வரும் பயனர்கள், தங்கள் அனைத்து டிஜிட்டல் பணிகளையும் எக்ஸ் தளத்திலேயே முடிக்க அனுமதிக்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். இதன்படி, அடுத்து வீடியோ, ஆடியோ அழைப்பு மற்றும் சந்தாக்கள் போன்ற அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ள தகவல் ஏற்கனவே கசிந்த ஒன்றுதான். இருந்தாலும், தற்போது எக்ஸை ஆல் இன் ஒன் செயலியாக மாற்றும் நோக்கத்துடன், வாட்ஸ்அப் போல கட்டணம் செலுத்தும் வசதியை இதில் சேர்க்க, மஸ்க் இப்போது முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டணம் செலுத்தும் சேவை குறித்த தகவலை பகிர்ந்த ஆராய்ச்சியாளர்
சமீபத்திய அறிக்கையின்படி, பயனர்கள் விரைவில் எலோன் மஸ்கின் எக்ஸ் தளத்தில் பணம் செலுத்தும் வசதியைப் பெறுவார்கள். இந்த மாற்றம் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான புதிய தளத்தை வழங்கும் என்றும் ஆராய்ச்சியாளர் நிமா ஓவ்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வரவிருக்கும் கட்டண அம்சத்தைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார். இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் பணத்தை மாற்றவும், தங்கள் பேலன்சை சரிபார்க்கவும் மற்றும் அவர்களின் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்க்கவும் முடியும். ட்விட்டரில் பணம் செலுத்தும் சேவை வாலட் அமைப்பை அடிப்படையாகக் கொண்டதா அல்லது பயனர்களின் வங்கிக் கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்படுமா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.