எக்ஸ் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்தும் எலான் மஸ்க்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸின் சேவைகளை நிறுத்தவோ அல்லது எக்ஸ் தளத்தை ஐரோப்பிய பயனாளர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை அமல்படுத்தியது ஐரோப்பிய ஒன்றியம். அமேசான் போன்ற ஆன்லைன் வணிகத் தளங்கள் முதல் எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் வரை அனைத்து நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் இந்த டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் வழங்கியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்த சட்டங்களுக்கு ஏற்ப ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸின் செயல்பாடுகளில் மாற்றம் செய்வதை விடுத்து, அங்கே தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ள எலான் மஸ்க் ஆலோசித்து வருவதகாக் கூறப்படுகிறது.
ஏன் சேவையை நிறுத்த திட்டமிடுகிறார் எலான் மஸ்க்?
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் போலியான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது, குறிப்பிட்ட பயனாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் நிறுவனத்தின் தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. முக்கியமாக அனைத்து நிறுவனங்களும் வெளிப்படைத்தன்மையை அனைத்து டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை மீறும் நிறுவனங்கள் மீது அதன் உலகளாவிய வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே, இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை விடுத்து எக்ஸின் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்த எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.