ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?
நாளை தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் மொபலான 'ஷாவ்மி 13 அல்ட்ரா' மொபைல்போனை வெளியிடவிருக்கிறது ஷாவ்மி. கடந்த மாதம் தான் ஷாவ்மி 13 ப்ரோ மாடலை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷாவ்மி 13 ப்ரோவைப் போலவே இந்த புதிய அல்ட்ராவிலும் மூன்று 50 MP கூடுதல் கேமராக்களுடன் ஒரு இன்ச் அளவிலான 50 MP சோனி IMX989 பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் கேமராக்களில் ஜெர்மனைச் சேர்ந்த லெய்கா நிறுவனத்தின் லென்களையே பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதோடு 32 MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இது அந்நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால், குவால்காமின் ப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸரே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு என்ன வசதிகள்:
மேலும் கிடைத்த தகவல்களின் படி, அதன் பின்பக்கம் லுக்குக்காகவும், கிரிப்புக்காகவும் வீகன் லெதர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் சப்போர்ட், டைப் சி போர்ட், வை-பை 7, ப்ளூடூத் 5.3, 6.74 இன்ச் 2K AMOLED டிஸ்பிளே, 120 Hz ரெப்ரஷ் ரேட், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரேட்டிங், ஆண்ட்ராய்டு 13 ஆகிய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியிடப்பட்ட 12S அல்ட்ரா மாடலை சீனாவில் மட்டுமே வெளியிட்டது ஷாவ்மி. மற்ற சந்தைகளில் அந்த மொபைலை அந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது இந்த அல்ட்ரா 13 மாடலையும் சீனாவில் மட்டும் வெளியிடுமா அல்லது மற்ற சந்தைகளுக்கும் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.