விண்வெளியில் உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? அந்த உடலை என்ன செய்வார்கள்?
விண்வெளித் திட்டங்களும், விண்வெளிச் சுற்றுலாக்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது வரை நம்மில் பெரும்பாலானோர் யோசித்திராத ஒரு கேள்வியை எழுப்ப வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. விண்வெளித் திட்டங்களின் போது யாரேனும் இறக்க நேரிட்டால் என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்? இப்படி ஒரு கேள்விக்கான பதிலை எப்போதும் சொல்ல வேண்டிய தேவை எழக்கூடாது என நாம் கருதும் வேளையில் அதனைப் பற்றிய திட்டமிடுதலும் அவசியமாகிறது. பிற நாடுகளை விட அதிகளவில் விண்வெளித் திட்டங்களை மேற்கொள்வது அமெரிக்கா தான். 2025-ல் நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் வைத்திருக்கிறது நாசா. எனவே, மேற்கூறிய சூழ்நிலை எழும் பட்சத்தில் அதற்கான நெறிமுறைகளை அந்த அமைப்பு வகுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விண்வெளியில் உயரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?
பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பாதையான சர்வதேச விண்வெளி நிலையத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், தனி காப்சூல் மூலம் அந்த உடலை சில மணி நேரங்களிலேயே பூமிக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். நிலவில் உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த உடலுடன் பிற விண்வெளி வீரர்களும் சில நாட்களில் பூமிக்குத் திரும்பி விடுவார்கள். செவ்வாய் கிரகத்திலோ அல்லது அந்த திட்டத்தின் ஏதோவொரு பகுதியிலோ உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட திட்டம் முடிந்த பிறகே, சில ஆண்டுகளில் அந்த உடலை பூமிக்கு கொண்டு வருவார்கள். அதுவரை, அந்த உடலை விண்கலத்தின் தனி அறையில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். எனினும், விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யவும் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.