
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், அவரது கணவர் கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
நாசாவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்களது போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது.
இவர்களை திரும்ப பூமிக்கு கொண்டுவருவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகின்றன.
கூடுதலாக அவர்கள் திரும்பும் தேதியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து விண்வெளி ஆர்வலர்கள் பலரும் கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துள்ளனர்.
எனினும் இந்த நேரத்தில், இந்த விண்வெளி வீரர்களின் குடும்பத்தினரின் மனநிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பம்
விண்வெளி வீரர்களின் குடும்பத்தாரின் மனநிலை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் இருவரும் விண்வெளியில் தங்கள் வேலையை என்ஜாய் செய்து கொண்டிருப்பார்கள் என கூறுகிறார்கள் அவர்களின் குடும்பத்தினர்.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, சுனிதா வில்லியம்ஸின் கணவர் மைக்கேல், அவர் காலவரையின்றி சிக்கிக்கொண்டாலும், அந்த இடம் தான் அவரது "மகிழ்ச்சியான இடம்" என்று கூறியுள்ளார்.
வில்மோரின் குடும்பமும் அவர் விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பது குறித்து அமைதியாக இருக்கிறது.
"பிப்ரவரி அல்லது மார்ச் வரை நாங்கள் அவரை எதிர்பார்க்க மாட்டோம்" என்று வில்மோரின் மனைவி டீன்னா கூறியதாக, நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அவரது குடும்பத்தினர், பெரும்பாலான நாட்களில் அவருடன் பலமுறை ஃபேஸ்டைம் மூலம் தொடர்பில் இருப்பதாக கூறியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.