நாய்களின் ஆயுளை நீட்டிக்க புதிய மாத்திரை! அமெரிக்க நிறுவனத்தின் அதிரடி கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை சேர்ந்த பயோடெக் நிறுவனமான 'லாயல்' (Loyal), வயதான நாய்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் வகையில் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி வருகிறது. LOY-002 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள், நாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அவற்றின் ஆயுளை நீட்டிப்பதிலும் நல்ல பலன்களை தந்துள்ளன. இது வெறும் சத்து மாத்திரை அல்ல; நாய்களின் முதுமை அடையும் வேகத்தை உயிரியல் ரீதியாக குறைக்கும் ஒரு மருந்தாகும். 14 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள, 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நாய்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய்கள் எளிதில் உட்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
செயல்பாடு
இது எப்படி செயல்படுகிறது?
நாய்களின் உடலில் உள்ள இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி 1(IGF-1) என்ற ஹார்மோனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. குட்டிகள் வளர இந்த ஹார்மோன் அவசியம் என்றாலும், வளர்ந்த பிறகு இது செல்களை விரைவாக முதுமையடைய செய்கிறது. குறிப்பாக பெரிய வகை நாய் இனங்களில் இந்த ஹார்மோன் அதிகமாக இருப்பதால், அவை சீக்கிரமே முதுமையடைந்து விடுகின்றன. LOY-002 மருந்து இந்த ஹார்மோனின் அளவை குறைப்பதன் மூலம், செல்கள் முதுமையடைவதை தடுத்து, வயது சார்ந்த நோய்கள் மற்றும் உறுப்புகள் செயலிழக்கும் அபாயத்தை குறைக்கிறது. FDA மூன்று நிலைகளில், ஏற்கனவே இரண்டு நிலைகளில் இந்த மருந்து ஒப்புதல் பெற்றுவிட்டது. இறுதிக்கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மாத்திரை சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.