அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மும்பையில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆர்) ஆகியவற்றிற்கான நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (என்சிஓஇ) நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக நிறுவ மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்டம்பர் 18) ஒப்புதல் அளித்தது. இதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் இம்மர்சிவ் கிரியேட்டர்ஸ் (ஐஐஐசி) என அழைக்கப்படும் மையங்கள் உருவாக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது கூறினார். பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சிகளை எட்ட புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று வைஷ்ணவ், நாட்டில் வளர்ந்து வரும் படைப்பாளி பொருளாதாரம் பற்றி பேசுகையில் கூறினார்.
ஐஐஐசி கட்டமைக்கப்படுவதன் நோக்கம்
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை மத்திய அரசுடன் இணைந்து இந்த நிறுவனத்தை கட்டமைக்கும் எனத் தெரிகிறது. முன்மொழியப்பட்ட தேசிய மையம் நாட்டில் ஏவிஜிசி-எக்ஸ்ஆர் சுற்றுச்சூழல் அமைப்பைத் தொகுத்து, அமெச்சூர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கற்றல் திட்டங்களை வழங்கும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய நுகர்வுக்கு இந்திய வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும் இந்திய அறிவுசார் சொத்துக்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு உள்கட்டமைப்பு, முறையான திறன் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுக்கும் இடமாகும் இது திகழும்.
நிறுவனத்தின் பெயர் அறிவிப்பு
இந்த நிறுவனத்திற்கு தற்போது ஐஐஐசி என தற்காலிகமாக பெயர் வைத்திருந்தாலும், 2025 பிப்ரவரியில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டின் போது முறையான பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (வேவ்ஸ்) என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முதல் உச்சிமாநாடு ஆகும். வேவ்ஸ் முதலில் கோவாவில் நவம்பர் 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பின்னர் டெல்லியில் பிப்ரவரி 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் திறமையானவர்களை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.