ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய சந்திரயான்-3யின் பாகம்?
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில், வினோதமான செம்பு நிறத்தாலான உலோக உருளை ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, அந்நாட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வினோதமான பொருள் குறித்து சோதனை செய்திருக்கிறார்கள். அந்தப் உலோக உருளையை சோதனை செய்த பின்பு, அது என்ன பொருள் என்பதைத் திட்டவட்டமாகத் தெரியாத நிலையில், அதன் அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அந்த உலோக உருளையை பறக்கும் தட்டிலிருந்த பிரிந்த பாகாமாக இருக்கலாம் எனவும், காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் எனவும் பொதுமக்களில் ஒரு சாரர் புரளியைக் கிளப்பியிருக்கின்றனர்.
சந்திரயான்-3யில் இருந்து பிரிந்த பாகமா?
கரையொதுங்கிய விநோத உலோக உருளை குறித்து காவல்துறையினர் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வரும் வேளையில், ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்தப் பொருள் குறித்த தகவல்களை விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. வெளிநாட்டு ராக்கெட்டில் இருந்து பிரிந்த பாகமாக இருக்கலாம் என்ற ரீதியில் தகவல்களைத் திரட்டி வருவதாக, ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விண்வெளி தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆலிஸ் கார்மன், கரையொதுங்கிய பொருளானது ஒரு எரிபொருள் உருளை எனவும், சில நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3யின் ராக்கெட்டில் இருந்து இது பிரிந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.