Loading...
இனி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது வாசனையை நுகர்ந்து பார்க்கலாம்; விஞ்ஞானிகளின் புதிய சாதனை
இனி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது வாசனையை நுகர்ந்து பார்க்கலாம்

இனி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது வாசனையை நுகர்ந்து பார்க்கலாம்; விஞ்ஞானிகளின் புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களைப் போல இனி இன்டர்நெட் வழியாக வாசனைகளையும் எளிதாக பரிமாறிக் கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சென்ட்ரானிக் என அழைக்கப்படும் இந்த ஒல்ஃபாக்டரி இன்டர்ஃபேஸ் சாதனம், ஒரு இடத்தில் உள்ள பொருளின் வாசனையை மோப்பம் பிடித்துத் டிஜிட்டல் தரவுகளாக மாற்றி மற்றொரு இடத்திற்கு இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கிறது. ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுன்யு யாங் தலைமையிலான குழுவினர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

செயல்பாடு

சென்ட்ரானிக் சாதனம் எவ்வாறு இயங்குகிறது?

இந்த அமைப்பில் ஆறு கேஸ் சென்சார்கள் கொண்ட ரோபோடிக் மூக்கு பொருத்தப்பட்டுள்ளது.

உணவு மற்றும் வாசனை திரவியங்களில் இருந்து வெளிப்படும் ஆவியாகும் கரிம சேர்மங்களை இந்த சென்சார்கள் கண்டறிந்து மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன.

இந்த சமிக்ஞைகளின் வடிவத்தைக் கண்டறிய பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஏஐ உதவியுடன் வாசனையின் வகை உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த விவரங்கள் டிஜிட்டல் தரவுகளாக இன்டர்நெட் வழியாக செய்தி அனுப்பப்படுவது போல உடனடியாக மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படுகிறது.

வாசனை

மறுமுனையில் வாசனையை உருவாக்கும் தொழில்நுட்பம்

தரவுகளை பெறும் மறுமுனையில் உள்ள மற்றொரு சாதனத்தில் சிறிய வாசனை திரவக் கொள்கலன்களும், நொடிக்கு 1,00,000 முறைக்கும் அதிகமாக அதிரக்கூடிய சிறிய தட்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

பெறப்பட்ட தரவுக்கு ஏற்ப இந்தத் தட்டுகள் அதிர்ந்து திரவத்தை மிக நுண்ணிய துளைகள் வழியாக வெளியேற்றி, அசல் வாசனையை மூடுபனி போல வெளிப்படுத்துகின்றன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த முன்மாதிரி சாதனம் காபி, கேக், ஆரஞ்சு, பீர் மற்றும் ரெட் ஒயின் ஆகிய ஐந்து வாசனைகளை 96% துல்லியத்துடன் கண்டறிந்து மறு உருவாக்கம் செய்துள்ளது.

ADVERTISEMENT

சாத்தியக்கூறுகள்

எதிர்கால பயன்பாடும் வர்த்தக சாத்தியக்கூறுகளும்

டிஜிட்டல் பயன்பாட்டில் இதுவரை பார்வை, ஒலி மற்றும் தொடுதல் ஆகிய புலன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த குறையைப் போக்கி வாசனை என்ற புதிய பரிமாணத்தை இதில் இணைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் ஆன்லைன் மூலமாக வாசனை திரவியங்களை வாங்குவதற்கு முன் அவற்றின் மணத்தை நுகர்ந்து பார்க்கவும், விஆர் கேமிங் மற்றும் உணவுத் துறையிலும் இந்த தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவத் துறை சோதனைக்கும் இது பெரிதும் உதவும்.

ADVERTISEMENT