நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா
சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும் நோக்கதுடனும், பிற அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்களுடனும் கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது இஸ்ரோ. தற்போது, இந்தியாவிற்குப் போட்டியாக லூனா 25 (Luna 25) என்ற ஆய்வுக் கலனை நிலவிற்கு அனுப்பியிருக்கிறது ரஷ்யா. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.41 மணி) சோயஸ் 2.1v ராக்கெட் மூலம் இந்த விண்கலனை விண்ணில் செலுத்தியிருக்கிறது ரஷ்யா. 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு, நிலவிற்கு நோக்கிச் செயல்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் முதல் திட்டம் இது தான்.
எப்போது லூனா 25 நிலவைச் சென்றடையும்?
தற்போது விண்ணில் ஏவப்பட்டிருக்கும் லூனா 25 ஆனது அடுத்த 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்துவிடும் எனத் தெரிவித்திருக்கிறது ரஷ்யா. அதன் பிறகு, ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தபடியே, தரையிறங்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்திற்காகக காத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர், இந்தியாவின் சந்திராயன் 3 தரையிறங்கும் நாளா அதே ஆகஸ்ட் 23-ம் தேதியே தங்களது லூனா 25 ஆய்வுக் களத்தையும் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தது ரஷ்யா. ஆனால், தற்போது அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி விண்கலத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறது ரஷ்யா. லூனா 25வை தரையிறக்குவதற்கு நிலவின் தென்துருவத்தில் மூன்று இடங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நாடு.
ரஷ்யாவின் லூனா 25 திட்டம்:
எதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது ரஷ்யா?
நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சில பள்ளத்தாக்குப் பகுதிகளில், பனிக்கட்டிகளாக தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்காவும், உலகின் பிற விண்வெளி அமைப்புகள் சிலவும் சமீபத்தில் கண்டறிந்தன. அந்தத் தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு செய்யவே இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது ரஷ்யா. இந்த லூனா 25 ஆய்வுக் கலமானது ஓர் பூமி ஆண்டுகள் நிலவில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. சந்திரயான் 3யானது இரண்டு பூமி வாரங்கள் மட்டுமே அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் தரைப்பகுதியை 15 செமீ வரை குடைந்து, அதன் பாறை மற்றும் மண் மாதிரிகளை எடுத்து, தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவிருக்கிறது லூனா 25.
நிலவிற்கு செல்லத் திட்டமிடும் உலக நாடுகள்:
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உலக நாடுகளில் நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. நிலவின் பூமத்திய ரேகையின் அருகே, அறிவியல் ஆய்வுக் கலன்கள் செயல்படுவதற்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், அங்கேயே பல்வேறு நாடுகள் தங்கள் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், தற்போது நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்வதில் உலக நாடுகளைச் சேர்ந்த விண்வெளி அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 2019-ம் ஆண்டு மட்டும், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த நிலவுத் திட்டங்கள் தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கும் ரஷ்யா:
கடைசியாக 1976-ம் ஆண்டு சோவியத் யூனியனாக இருந்த போது நிலவு திட்டம் ஒன்றை செயல்படுத்தியது ரஷ்யா. அதன் பிறகு, 47 ஆண்டுகள் கழித்து தற்போது தான் புதிய திட்டம் ஒன்றை அந்நாடு செயல்படுத்தியிருக்கிறது. அதுவும், உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை விதித்திருக்கும் இந்த நேரத்தில், பிற நாடுகளின் உதவியின்றி விண்வெளித் திட்டம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது ரஷ்யா. தன்னிச்சையாக தங்களால் விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த முடியும் என உலக நாடுகளுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ரஷ்யா. எனவே, இந்தத் திட்டத்தின் வெற்றி அந்நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.