
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; எந்தெந்த ஆப்ஸ்களுக்கு பாதிப்பு?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களின் எதிர்மறையான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், "ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மக்களவையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெற்றது. மசோதாவை தாக்கல் செய்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டங்களால் ஆண்டுதோறும் சுமார் 45 கோடி இந்தியர்கள் மொத்தமாக ₹20,000 கோடி வரை இழப்பதாகக் குறிப்பிட்டார். இந்த தளங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (money laundering) மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கவலை தெரிவித்தார்.
திசை திருப்பல்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை
இந்த சட்டம் தொடர்பாக ஊடகங்கள் மூலம் பொதுக் கருத்தை திசைதிருப்ப முயற்சிக்கும் நபர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார். மறுபுறம், இந்த மசோதா ஒரு முழுமையான தடை அல்ல என்றும், இந்தியாவை ஆன்லைன் விளையாட்டு மேம்பாட்டின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் (IICT) போன்ற நிறுவனங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்றார். புதிய சட்டம், திறனை அடிப்படையாகக் கொண்டதா அல்லது அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் பண விளையாட்டுகள், அவற்றின் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது.
தாக்கம்
எந்தெந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு?
மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025, இந்தியாவின் ரியல் மணி கேமிங் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. $8 பில்லியன் மதிப்புள்ள Dream11 மற்றும் $2.5 பில்லியன் மதிப்புள்ள Mobile Premier League (MPL) போன்ற பிரபலமான ஃபேண்டசி கிரிக்கெட் தளங்கள் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் முக்கிய நிறுவனங்களில் அடங்கும். தவிர, My11Circle, Howzat, SG11 Fantasy, WinZO, Games24x7, Junglee Games, PokerBaazi மற்றும் Rummy Culture உள்ளிட்ட பிற செயலிகளும் பாதிக்கப்படும். இந்த மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.