இந்தியாவில் புதிய 'M6 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது போகோ
இந்தியாவில் தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக, M6 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான போகோ. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்? புதிய M6 5G ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.74 இன்ச் டிஸ்பிளேவை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வழங்கியிருக்கிறது போகோ. பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50MP முதன்மை கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
போகோ M6 5G: வசதிகள் மற்றும் விலை
8GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய போகோ M6 5G பட்ஜெட் ஸ்மார்ட்போனில், மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய M6 5G-யில், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது போகோ. இத்துடன் பாக்ஸிலேயே, 10W சார்ஜர் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய M6 5G ஸ்மார்ட்போனின், 4GB/128GB வேரியன்டை ரூ.10,499 விலையிலும், 6GB/128GB வேரியன்டை ரூ.11,499 விலையிலும், டாப் எண்டான 8GB/256GB வேரியன்டை ரூ.13,499 விலையிலும் வெளியிட்டிருக்கிறது போகோ. டிசம்பர் 26ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.